தமிழ்நாடு

கடன் 21% குறைந்தது சாதனையா? முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ள முடியாமல் தவெக அரசு திணறுகிறது: தங்கம் தென்னரசு விமர்சனம்!

top-news

சென்னை: தமிழக அரசு வாங்கும் கடன் 21 சதவீதம் குறைந்துள்ளதாக வெளியான தகவலை முன்வைத்து, தவெக அரசின் நிதி மேலாண்மை குறித்து திமுக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிட்டது எவ்வளவு?

கடந்த நிதியாண்டின் முதல் அரையாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் மாநில அரசுப் பத்திரங்கள் மூலம் திரட்டப்பட்ட கடன் 21 சதவீதம் குறைந்துள்ளது.

இதனைச் சாதனையாகக் கூறும் அரசு, மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள் மற்றும் மூலதனச் செலவினங்களின் முழு விவரங்களையும் வெளியிட வேண்டும் எனத் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.

ரூ.48,000 கோடி கடன் பெறத் திட்டமா?

2025-26 நிதியாண்டின் முதல் அரையாண்டில் ரூ.13,002.22 கோடி மூலதனச் செலவு மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசின் செலவின விவரங்களைக் கேட்டுள்ளார்.

மேலும், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் ரூ.48,000 கோடி கடன் பெற அரசு திட்டமிட்டிருப்பதாகவும், இது முந்தைய காலாண்டில் திரட்டப்பட்ட ரூ.23,500 கோடியைவிட இரு மடங்குக்கும் அதிகம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வளர்ச்சிப் பணிகளைத் தாமதப்படுத்துவதும், முடிக்கப்பட்ட பணிகளுக்கான தொகைகளை நிலுவையில் வைத்திருப்பதும் நிதி மேலாண்மை சாதனையாகாது எனக் குற்றம்சாட்டிய அவர், கடன் குறைவுக்கான உண்மையான காரணத்தை அரசு விளக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.