சென்னை: தமிழக அரசின் அண்ணன் சீர் திருமண உதவித் திட்டத்தில் பயன்பெற விரும்பும் பெண்கள் ஆதார் எண்ணைச் சமர்ப்பிப்பது அல்லது ஆதார் அங்கீகார நடைமுறையை நிறைவு செய்வது கட்டாயம் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அறிவித்துள்ளது.
யாருக்கெல்லாம் இந்தத் திட்டம்?
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள் உள்ள தகுதியான பெண்களுக்கு, திருமணத்தின்போது 22 காரட் தரத்தில் 8 கிராம் தங்க நாணயமும் ஒரு பட்டுப்புடவையும் வழங்கப்பட உள்ளன. அக்டோபர் 5ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின்படி, இத்திட்டத்திற்கு முதல்கட்டமாக ரூ.812 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆதார் இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
ஆதார் அட்டை இல்லாத பெண்கள், திட்டத்தில் பதிவு செய்வதற்கு முன்பாக ஆதார் பதிவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆதார் எண் கிடைக்கும் வரை, பதிவு ஒப்புகைச் சீட்டுடன் பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட மாற்று ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம்.
ஆதார் பதிவு மையங்கள் இல்லாத பகுதிகளில் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கைரேகை சரிபார்ப்பில் சிக்கல் ஏற்பட்டால் கருவிழி அல்லது முக அங்கீகாரம் உள்ளிட்ட மாற்று நடைமுறைகளைப் பயன்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தகுதியுள்ள பெண்கள் ஆதார் தொடர்பான ஆவணங்களைத் தயாராக வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.



