சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் போதைப்பொருள் கடத்தல் விவகாரங்களை முன்வைத்து, முதல்வர் விஜய்யை திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். “Drugs-ஐ விடு, Sports-ஐ எடு” என்று இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய முதல்வர், முதலில் ஓய்வை விட்டுவிட்டு தனது துறையின் பொறுப்பைக் கையில் எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் சுமார் 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகி பூபாலன் கைது செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. இந்தச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டிய ஸ்டாலின், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆளுங்கட்சியின் பொறுப்பு குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
முதல்வர் விஜய் காவல்துறையை நேரடியாகக் கண்காணித்து, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மாநிலத்தில் நிகழும் வன்முறைக் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், போதைப்பொருள் கடத்தல் வழக்கின் பின்னணியில் உள்ள அனைவரையும் அடையாளம் கண்டு, பாரபட்சமின்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். இந்த விமர்சனங்கள் தமிழக அரசியலில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.



