சென்னை: வடகிழக்குப் பருவமழை காரணமாகச் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளைத் தீவிரப்படுத்த முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
மழை பாதிப்புகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
களத்தில் இறங்க அமைச்சர்களுக்கு அறிவுறுத்தல்
சென்னையில் உள்ள அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று மழைநீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்யவும், அதிகாரிகளுடன் இணைந்து உடனடி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தாழ்வான பகுதிகளில் மழைநீரை வெளியேற்றுதல், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குதல் மற்றும் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியச் சேவைகள் தடையின்றிக் கிடைப்பதை உறுதிசெய்தல் ஆகிய பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மழை பாதிப்புகள் தொடர்பான பொதுமக்களின் புகார்களுக்கு உடனடியாகத் தீர்வு காணவும், மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் இருக்கவும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



