சென்னை: இந்தியத் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவர வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தேர்தல் நடைமுறைகள் தொடர்பாக நான்கு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
SIR நடைமுறையை ரத்து செய்யக் கோரிக்கை
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) காரணமாகத் தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுவதாகக் குற்றம்சாட்டிய திமுக, அந்த நடைமுறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
மேலும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களை முன்வைத்த திமுக, தேர்தல் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்த வாக்குச்சீட்டு முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரியுள்ளது.
குடியரசுத் தலைவரிடம் மனு
SIR நடைமுறையை ரத்து செய்வது மற்றும் வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவருவது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, குடியரசுத் தலைவரிடம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு அளிக்க உள்ளனர்.



