தமிழ்நாடு

“விலைவாசி உயர்வால் சாமானிய மக்கள் கடும் பாதிப்பு” : தமிழக அரசு மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

top-news

திருச்சி: தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தவெக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அரிசி ஒரு கிலோ ரூ.100-ஐ எட்டியுள்ளதாகவும், சர்க்கரை விலை கிலோவுக்கு ரூ.25 உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். பருப்பு, புளி உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலை சுமார் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஏழை, நடுத்தர மக்கள் பாதிப்பு

விலைவாசி உயர்வால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்திப்பதாகக் குறிப்பிட்ட பழனிசாமி, இதுகுறித்து கேள்வி எழுப்பினால் விலை உயர்வு எங்கே ஏற்பட்டுள்ளது என சம்பந்தப்பட்ட அமைச்சர் கேட்பது ஏற்புடையதல்ல என்று விமர்சித்தார்.

மேலும், சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 45 நாட்களிலேயே நிறுத்தப்பட்டதால் டெல்டா விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினார்.

ஜனவரி மாதம் வரை விவசாயத்திற்குத் தேவையான தண்ணீரை உறுதிசெய்யவும், கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெற்றுத்தரவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.