சென்னை: தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்துவது நாகரிகமற்ற செயல் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், குழந்தைகள் மூலம் வாக்கு சேகரிப்பதை மட்டும் காரணமாகக் கொண்டு தேர்தல் வெற்றியை ரத்து செய்ய முடியாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
சேலம் வடக்கு தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கே.சிவகுமாரின் வெற்றியை எதிர்த்து, திமுக வேட்பாளர் ராஜேந்திரன் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
விஜய் தனது பிரசாரத்தின்போது, குடும்பத்தினரை தவெகவுக்கு வாக்களிக்குமாறு குழந்தைகள் வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது தேர்தலில் தேவையற்ற செல்வாக்கை ஏற்படுத்தியதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டது.
நீதிமன்றம் தெரிவித்த முக்கிய கருத்துகள்
வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, குழந்தைகளை வைத்து அரசியல் பிரசார வீடியோக்களை உருவாக்குவது கண்டிக்கத்தக்கது எனக் குறிப்பிட்டார்.
இருப்பினும், குழந்தைகளின் வேண்டுகோளால் பெற்றோரின் சுதந்திரமான வாக்களிக்கும் உரிமை பறிக்கப்பட்டதாகக் கருத முடியாது என்றும் தெரிவித்தார்.
இதுபோன்ற செயல்களைத் தேர்தல் வெற்றியை ரத்து செய்வதற்கான சட்டப்பூர்வ காரணமாக மாற்ற வேண்டுமா என்பது குறித்து நாடாளுமன்றம் பரிசீலிக்க வேண்டும் எனவும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.
இதையடுத்து, சிவகுமாரின் வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட தேர்தல் வழக்கை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.



