சென்னை: மலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு உயர்தர மருத்துவச் சேவைகளை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள ‘குறிஞ்சி நலம்’ தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னெடுத்துள்ள இந்த அமைப்பின் இலட்சினையையும் ஸ்டாலின் வெளியிட்டார்.
2,000 மலைக்கிராமங்களைச் சென்றடைய இலக்கு!
தமிழகத்தில் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் வசிக்கும் சுமார் 16 லட்சம் பழங்குடியின மக்களுக்கு மருத்துவச் சேவைகளை வழங்குவது இம்முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று மருத்துவப் பரிசோதனை, ஆலோசனை, மருந்துகள் மற்றும் உயர்சிகிச்சைக்கான வழிகாட்டுதல்களை வழங்க உள்ளனர்.
குரங்கனியில் முதல் மருத்துவ முகாம்
முதல் முகாம் அக்டோபர் 25-ஆம் தேதி தேனி மாவட்டம் குரங்கனியிலும், அடுத்த முகாம் நவம்பர் 29-ஆம் தேதி வால்பாறையிலும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மலைவாழ் மக்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களின் பலன்களைப் பெற்றுத் தருவதும், மூன்று ஆண்டுகளில் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட கிராமங்களைச் சென்றடைவதும் அமைப்பின் திட்டமாகும்.



