தமிழ்நாடு

“திறந்து வைப்பதில் என்ன பெருமை? திட்டமிட்டு உருவாக்குவதுதான் சாதனை!” பெரியார் அறிவுலகம் குறித்து மு.க.ஸ்டாலின் அதிரடி கருத்து

top-news

சென்னை: கோவையில் ரூ.300 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பெரியார் அறிவுலகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்துள்ள நிலையில், திட்டத்தை உருவாக்கிய பெருமை திமுகவுக்கே உரியது என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 2024-25 நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்திற்கு 2024 நவம்பர் 6-ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

1.98 லட்சம் சதுர அடியில் ஏழு தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தில் 1.25 லட்சம் புத்தகங்கள், டிஜிட்டல் நூலகம், அறிவியல் மையம் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

“யார் திறந்தால் என்ன?”

கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின்னரே திறக்க வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருந்ததாகக் கூறிய ஸ்டாலின், ஒரு திட்டத்தைத் திறந்து வைப்பதைவிட அதைத் திட்டமிட்டு உருவாக்குவதில்தான் உண்மையான பெருமை இருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், பெரியார் அறிவுலகத்தில் இடம்பெற்றிருந்த ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர் மறைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர், முந்தைய அரசின் சாதனைகளை மறைக்க முடியாது என்றும் விமர்சித்தார்.

பெரியார் அறிவுலகம் கோவையின் புதிய அடையாளமாகத் திகழும் எனக் குறிப்பிட்ட ஸ்டாலின், பொதுமக்கள் இந்த அறிவு மையத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அழைப்பு விடுத்தார்.