தாராபுரம்: தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்யபாமா, ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இன்று காலை மதுக்கம்பாளையம் வாக்குச்சாவடியில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இதற்கிடையே, தேர்தல் செலவு தொடர்பாக சத்யபாமா பேசியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்தக் காணொலி சித்தரிக்கப்பட்டது என்றும், தாம் அவ்வாறு பேசவில்லை என்றும் சத்யபாமா மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த வீடியோ தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும், மக்கள் தெளிவாக இருப்பதாகவும் அவர் கூறினார். வீடியோ தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் சத்யபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.



