சென்னை: தமிழ்நாட்டில் இன்று நடைபெற்று வரும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி மதுராந்தகத்தில் 15.99 சதவீதமும், தாராபுரத்தில் 17.55 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
இரு தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
மதுராந்தகம் தொகுதியில் தவெக, திமுக, அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 27 பேர் போட்டியிடுகின்றனர். தாராபுரத்தில் தவெக, திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இரு தொகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது. பதிவான வாக்குகள் அக்டோபர் 9-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.



