சென்னை: பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 11-ம் தேதி சென்னை வர உள்ள நிலையில், அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. பிரதமர் செல்லும் வழித்தடத்தில் ரோடுஷோ நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
பிரதமர் மோடி சென்னை வந்ததும் பூந்தமல்லி சென்று, பூந்தமல்லி - வடபழனி இடையிலான சுமார் 14.64 கி.மீ. நீளமுள்ள மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார். தொடர்ந்து பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து போரூரில் இருந்து காரில் சென்னை ஐஐடி நோக்கி பிரதமர் செல்ல உள்ளார். இந்த வழித்தடத்தில், குறிப்பாக சைதாப்பேட்டை சின்னமலை முதல் கிண்டி வழியாக சென்னை ஐஐடி வரை சுமார் 1.5 கி.மீ. தொலைவுக்கு ரோடுஷோ மற்றும் வரவேற்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. வழிநெடுகிலும் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரண்டு பிரதமரை வரவேற்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பிரதமர் பங்கேற்க உள்ளதுடன், பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்திலும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு மற்றும் வரவேற்பு ஏற்பாடுகள் தொடர்பாக தமிழக அரசு, காவல்துறை, மெட்ரோ நிர்வாகம் மற்றும் பாஜக நிர்வாகிகள் தரப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



