தமிழ்நாடு

மகளிருக்கான ‘வெற்றிப் பயண’ திட்டத்துக்கு எதிரான வழக்கு வாபஸ்

top-news

சென்னை: தமிழக அரசின் ‘வெற்றிப் பயண’ திட்டத்துக்கு எதிராக ஈரோட்டைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையின்போது வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து, அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயண வசதியை விரிவுபடுத்தும் வகையில் ‘வெற்றிப் பயண’ திட்டம் அக்டோபர் 2-ம் தேதி தொடங்கப்பட்டது. மாநிலம் முழுவதும் 12,600-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தால் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்றும், அரசுப் பேருந்துகளுக்கு வழங்கப்படுவது போன்று தனியார் பேருந்துகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரி ஈரோட்டைச் சேர்ந்த பேருந்து உரிமையாளர் கலாமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும், திட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கவும் அவர் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும் திட்டத்தை, குறிப்பிட்ட இரண்டு வழித்தடங்களில் மட்டும் பேருந்துகளை இயக்கும் ஒருவர் எவ்வாறு எதிர்க்க முடியும் என்பது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து மனுதாரர் தரப்பில் வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மனுவை வாபஸ் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்தது.