தமிழ்நாடு

சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தடம் புரண்டது: தாம்பரம் - கடற்கரை சேவை பாதிப்பு

top-news

சென்னை: தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற புறநகர் மின்சார ரயில், சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் இன்று காலை தடம் புரண்டதால், தாம்பரம் - கடற்கரை வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

ரயிலின் ஒரு பெட்டியின் சக்கரம் தண்டவாளத்தை விட்டு விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தைத் தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் தடம் புரண்ட பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் நிலைநிறுத்தும் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் பயணிகள் யாரும் காயமடையவில்லை என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி செல்லும் புறநகர் ரயில்களின் இயக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டது. தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் தற்காலிகமாக சென்னை பூங்கா மற்றும் எழும்பூர் நிலையங்களில் இருந்து இயக்கப்பட்டன.

தடம் புரண்ட ரயிலை அப்புறப்படுத்தி, வழித்தடத்தைச் சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன.