கோவை: தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில், தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக முதலமைச்சர் விஜய் கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தாராபுரத்துக்கு புறப்பட்டார்.
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்த முதலமைச்சர் விஜய், கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தாராபுரம் மாருதி நகரில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்துக்கு செல்கிறார். அங்கிருந்து பிரசார வாகனத்தில் சென்று ரோடு ஷோ மூலம் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.
முன்னதாக சாலை மார்க்கமாக தாராபுரம் சென்றபோது வழிநெடுகிலும் பொதுமக்கள் திரண்டதால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் மற்றும் காலதாமதத்தை தவிர்க்கும் வகையில், இந்த முறை ஹெலிகாப்டர் பயணம் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாராபுரம் தொகுதியில் பல்வேறு பகுதிகளில் ரோடு ஷோ மேற்கொள்ளும் விஜய், இறுதிக்கட்ட பிரசாரத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமாவுக்கு ஆதரவு திரட்ட உள்ளார். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.



