சென்னை: சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் சென்னையில் 1,293 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சென்னையில் 605 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், செப்டம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை இருமடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. செப்டம்பர் 30-ம் தேதி ஒரே நாளில் மட்டும் 72 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை தரவுகள் தெரிவிக்கின்றன.
டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் கொசு ஒழிப்பு மற்றும் காய்ச்சல் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, அதிக பாதிப்பு பதிவாகும் பகுதிகளில் கூடுதல் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
செப்டம்பர் மாதத்தில் 8,000-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் வீடுகளில் இருந்தே சிகிச்சை பெற்று குணமடைந்ததாகவும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தினசரி நடத்தப்படும் மருத்துவ முகாம்களின் எண்ணிக்கையை 50-ல் இருந்து 100 இடங்களாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மழைநீர் தேங்கும் இடங்களில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் பொதுமக்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் செய்யாமல் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



