செப்டம்பர் 1 முதல் 30-ம் தேதி வரை, சிங்கப்பெண் சிறப்புப் படையினர் 1,045 புகார்களுக்கு சம்பவ இடத்திற்கே நேரடியாகச் சென்று நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும், காணாமல் போன 15 பெண்கள் மற்றும் 16 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
குற்றத்தடுப்பு மற்றும் சமூக விழிப்புணர்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கல்வி நிறுவனங்களில் 2,812 விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், பிற இடங்களில் 11,787 நிகழ்ச்சிகளும், புலம்பெயர் தொழிலாளர்கள் மத்தியில் 706 விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டுள்ளன.
மேலும், குற்றங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக அடையாளம் காணப்பட்ட 57,183 இடங்களில் தொடர் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அறிவுசார் குறைபாடுடைய 25 பேர் மீட்கப்பட்டதுடன், 17 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. பள்ளிப்படிப்பை இடைநிறுத்திய 227 குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனிடையே, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை இளம் தலைமுறையினரிடம் ஏற்படுத்தும் வகையில், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக குறும்படப் போட்டியும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சார்பில் நடத்தப்படுகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக உடனடி உதவி தேவைப்படும் பொதுமக்கள் 1091 உதவி எண்ணை தொடர்புகொள்ளலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.



