சென்னை: பிரதமர் நரேந்திர மோடி வரும் அக்டோபர் 11-ம் தேதி தமிழகம் வருகிறார். சென்னையில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ள நிலையில், அவரது பயணத் திட்டம் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, அக்டோபர் 11-ம் தேதி காலை டெல்லியில் இருந்து புறப்படும் பிரதமர் மோடி, காலை 10.55 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் பூந்தமல்லி செல்கிறார்.
அங்கிருந்து பூந்தமல்லி முதல் போரூர் வரை மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம் செய்ய உள்ளார். இதையடுத்து சென்னை ஐஐடி வளாகத்துக்குச் செல்லும் அவர், அங்கு ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிறுவனர்களுடன் கலந்துரையாடுகிறார்.
மேலும், சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இசைஞானி இளையராஜாவை மையமாகக் கொண்ட இசைச் சிறப்பு மையம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். மேலும், தேசிய நெடுஞ்சாலை மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்ந்த திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்தின் பூந்தமல்லி - வடபழனி இடையிலான 14.64 கி.மீ. வழித்தடம் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்த நிகழ்வில் தமிழக முதலமைச்சர் விஜயும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன



