சென்னை: தமிழ்நாட்டில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் இன்று (அக்.2) தொடங்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதன்படி, மாநகரம் மற்றும் நகர்ப்புறங்களில் இயக்கப்படும் சாதாரணப் பேருந்துகளுடன், எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் உள்ளிட்ட அரசுப் பேருந்துகளிலும் மகளிர் கட்டணமின்றி பயணம் செய்யலாம். மாவட்டங்களுக்கு இடையேயான பயணத்திற்கு புறநகர் சாதாரணப் பேருந்துகளிலும், 40 கி.மீ.க்கும் அதிகமான மலைப்பகுதி வழித்தடங்களில் இயக்கப்படும் சாதாரணப் பேருந்துகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
திட்டத்தின் முக்கிய பலன்கள் என்ன?
- தொலைதூரப் பயணங்களிலும் மகளிருக்கு கட்டணச் சலுகை கிடைக்கும்.
- வேலைக்குச் செல்லும் பெண்களின் தினசரி போக்குவரத்துச் செலவு குறையும்.
- மாணவிகள் கல்வி நிறுவனங்களுக்கு செல்வதற்கு பயனுள்ளதாக இருக்கும்.
- மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான பயணச் செலவு குறையும்.
- மொத்தம் 12,692 அரசுப் பேருந்துகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தினசரி சுமார் 84.32 லட்சம் பெண்கள் மற்றும் திருநங்கைகள் பயன்பெறுவார்கள் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.



