தமிழ்நாடு

காருக்குள் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை என புகார்: ஜெம் வீரமணி மீது புதிய புகார்

top-news

சென்னை: சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி மீது மேலும் ஒரு புதிய புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் அளிக்கப்பட்டுள்ள இந்தப் புகாரில், கல்விக்கு உதவுவதாகக் கூறி தனது மகளை வீரமணி காரில் அழைத்துச் சென்றதாகவும், அப்போது காருக்குள்ளேயே வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் சிறுமியின் தாய் குற்றம்சாட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் புகாரைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட சிறுமியிடம் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்த உள்ளனர். ஏற்கனவே வீரமணிக்கு எதிராக பல்வேறு புகார்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது விசாரணை மேலும் விரிவடைந்துள்ளது.

வீரமணிக்கு எதிரான வழக்கை விசாரிக்க கூடுதல் காவல் ஆணையர் தேன்மொழி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிகள் மற்றும் அவர்களது பெற்றோர் புகார் அளிக்க காவல்துறை சார்பில் தொடர்பு எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய புகாரின் அடிப்படையில் சிறப்பு குழுவினர் மேற்கொள்ளும் விசாரணை மற்றும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.