சென்னை: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் தமிழக அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மீனவர்கள் சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.
பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், முள்ளிக்குப்பம், முள்ளிமாநகர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் பங்கேற்றனர். புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் தங்களது பாரம்பரிய மீன்பிடித் தொழிலும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், தங்களது பூர்வீக நிலங்களை மீண்டும் வழங்க வேண்டும், மீனவர் குடியிருப்புகளை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் போராட்டக்காரர்கள் முன்வைத்தனர். லூப் சாலையோர கடற்கரையை மீன்பிடித் தொழில் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
போராட்டத்தை முன்னிட்டு பட்டினப்பாக்கம் பகுதியில் காவல்துறையினர் அதிக அளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அரசாணையை திரும்பப் பெறாவிட்டால் அடுத்தகட்ட போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் மீனவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



