தமிழ்நாடு

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை இடைநீக்கம் செய்யக் கோரும் மனு: அடுத்த வாரம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

top-news

புதுடெல்லி: இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை இடைநீக்கம் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அடுத்த வாரம் விசாரணைக்கு பட்டியலிட உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் முடிவுகளை தலைமைத் தேர்தல் ஆணையர் தனிப்பட்ட முறையில் மேற்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பான சில முடிவுகளில், மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 324-வது பிரிவின்படி தேர்தல் தொடர்பான அதிகாரம் தனிநபர் ஒருவருக்கு அல்லாமல் தேர்தல் ஆணையத்துக்கே வழங்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் ஆணையம் பல உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக இருப்பதால், முடிவுகள் கூட்டாகவும், தேவையானபோது பெரும்பான்மை அடிப்படையிலும் எடுக்கப்பட வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணை நிறைவடையும் வரை ஞானேஷ் குமார் தலைமைத் தேர்தல் ஆணையராக செயல்படுவதைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்றும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மனுதாரர் கோரியுள்ளார்.

மேலும், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் சுதந்திரமான விசாரணைக் குழு அல்லது சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் மனுவில் இடம்பெற்றுள்ளது.

இந்த மனு தொடர்பான விசாரணை தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு அடுத்த வாரம் நடைபெற உள்ளது.