சென்னை: ‘ஜெம்’ வீரமணி தொடர்பான போக்சோ வழக்கில், முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும் என திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் மனு அளித்துள்ளார்.
‘ஜெம்’ வீரமணி விவகாரம் தொடர்பாக முதல்வர் விஜய் மற்றும் இரு அமைச்சர்கள் பொதுவெளியில் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையுடன் நேரடியாகத் தொடர்புடையவை என டி.ஆர்.பாலு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவர்களிடம் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமான ஆவணங்கள் அல்லது முக்கியத் தகவல்கள் இருந்தால், அவற்றை விசாரணை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 25-ம் தேதி முதல்வர் விஜய்யும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் திமுக மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும், செப்டம்பர் 26-ம் தேதி சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேலும் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்ததாகவும் டி.ஆர்.பாலு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் இருந்தால் அவை ஏன் இதுவரை விசாரணை அதிகாரிகளிடம் வழங்கப்படவில்லை, விசாரணை தொடர்பான ரகசியத் தகவல்கள் பொதுவெளிக்கு வந்ததா என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
மேலும், வழக்கில் தொடர்புடைய ஆதாரங்கள் மறைக்கப்படாமல் அல்லது அழிக்கப்படாமல் உடனடியாக சேகரிக்கப்பட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அனைவரிடமும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.



