சென்னை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து திமுக முன்னாள் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83,375 வாக்குகளும், திமுக வேட்பாளர் பெரியகருப்பன் 83,374 வாக்குகளும் பெற்றனர். இதனால் ஒரு வாக்கு வித்தியாசத்தில் சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இந்த வெற்றியை எதிர்த்து பெரியகருப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கு பதிவான தபால் வாக்கு, அதே பெயரில் உள்ள மற்றொரு திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டதாகவும், இதனால் தனது வெற்றி பாதிக்கப்பட்டதாகவும் மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, தனக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி சீனிவாச சேதுபதி மனு தாக்கல் செய்திருந்தார். தபால் வாக்கு வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்டதாகக் கூறுவதற்கு உரிய அடிப்படை இல்லை என்றும் அவரது தரப்பில் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நீதிபதி ஜி.கே. இளந்திரையன் இன்று தீர்ப்பு வழங்கினார். சீனிவாச சேதுபதி தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பெரியகருப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார்.



