சென்னை: தமிழக அரசின் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தில் தனியார் பேருந்துகளையும் இணைத்து, அதற்கான கட்டண இழப்பீட்டை அரசு மானியமாக வழங்க வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தனியார் பேருந்து உரிமையாளர்கள் தரப்பில், டீசல் விலை மற்றும் ஓட்டுநர், நடத்துநர்களின் ஊதியம் உள்ளிட்ட செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், பேருந்து கட்டணத்தில் போதிய மாற்றம் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தனியார் பேருந்து சேவைகள் நிதிச் சுமையை எதிர்கொள்வதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், அரசின் ‘வெற்றி பயணம்’ திட்டத்தில் தனியார் நகர மற்றும் புறநகர் பேருந்துகளையும் இணைக்க வேண்டும் என உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், ஒரு பயணத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பெண்களுக்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தனியார் பேருந்துகளையும் திட்டத்தில் இணைப்பதன் மூலம் பொதுமக்களுக்கு கூடுதல் பேருந்து வசதி கிடைப்பதுடன், பயணிகளின் காத்திருப்பு நேரத்தையும் குறைக்க முடியும் என உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தனியார் பேருந்து துறையை நம்பியுள்ள ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் பிற பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் அரசிடம் வலியுறுத்தியுள்ளனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.



