தமிழ்நாடு

குரூப்-1 தேர்வு: தூத்துக்குடியில் 79% பேர் பங்கேற்பு... 18 மையங்களில் தேர்வு நடைபெற்றது!

top-news

தூத்துக்குடி: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 முதல்நிலைத் தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தில் 79 சதவீத தேர்வர்கள் பங்கேற்று தேர்வு எழுதியுள்ளனர். மாவட்டம் முழுவதும் 18 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப்-1 முதல்நிலைத் தேர்வை எழுத 5,143 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 4,047 பேர் தேர்வில் கலந்து கொண்டனர். இதன் மூலம் 79 சதவீதம் பேர் தேர்வு எழுதியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீதமுள்ள 21 சதவீதம் பேர் தேர்வுக்கு வரவில்லை.

காரப்பேட்டை நாடார் மேல்நிலைப்பள்ளி, புனித லசால் மேல்நிலைப்பள்ளி, வ.உ.சிதம்பரம் கல்லூரி உள்ளிட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு தொடங்கியதையடுத்து மையங்களில் போலீஸ் பாதுகாப்பும், அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டது.

தேர்வு முறையாகவும், விதிமுறைகளின்படியும் நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்ய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் பல்வேறு தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். தேர்வர்களுக்கான குடிநீர், வெளிச்சம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் அவர் பார்வையிட்டார்.

இதற்கிடையில், தேர்வு மையத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்கு பிறகு வந்த சில தேர்வர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட காலமாக தேர்வுக்கு தயாராகியிருந்தும் தாமதத்தால் தேர்வு எழுத முடியாமல் சிலர் ஏமாற்றத்துடன் திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த குரூப்-1 முதல்நிலைத் தேர்வில் 1,65,828 பேர் பங்கேற்றுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்துள்ளார். தேர்வு முடிவுகள் சுமார் 2 மாதங்களில் வெளியாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.