மதுரை: தமிழக முதல்வர் விஜய் நாளை (செப். 28) மதுரை வருகை தர உள்ள நிலையில், விமான நிலையம் முதல் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள் மற்றும் முக்கிய சாலைகளில் காவல்துறையினர் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
முதல்வர் விஜய், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் தகுதியான குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சி முதலில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் நடைபெறுவதாக இருந்த நிலையில், தற்போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து, ரூ.10.25 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்டுள்ள மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தை முதல்வர் திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் இரண்டரை ஆண்டுகளாக நடைபெற்ற புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அருங்காட்சியகம் மீண்டும் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட உள்ளது.
மேலும், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு முதல்வர் விஜய் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையொட்டி கோயில் சுற்றுவட்டாரம் மற்றும் அவர் செல்லக்கூடிய வழித்தடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஆய்வு செய்து வருகின்றனர். எனினும், கோயில் தரிசனம் தொடர்பான முழுமையான பயணத் திட்டம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வரின் வருகையை முன்னிட்டு மதுரை விமான நிலையம், ராஜாஜி அரசு மருத்துவமனை, காந்தி அருங்காட்சியகம், மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் முக்கிய சாலைகளில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்தையும் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
முதல்வர் பதவியேற்ற பிறகு விஜய் மதுரைக்கு மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ பயணம் என்பதால், அவரது நிகழ்ச்சிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மீது கவனம் திரும்பியுள்ளது.



