தமிழ்நாடு

ரேஷன் அட்டைதாரர்களே கவனம்: தமிழகம் முழுவதும் இன்று eKYC கைரேகை பதிவு சிறப்பு முகாம்!

top-news

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளில் இன்று, செப்டம்பர் 26, குடும்ப அட்டைதாரர்களுக்கான கைரேகை பதிவு மற்றும் eKYC சரிபார்ப்பு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. விடுபட்டுள்ள குடும்ப உறுப்பினர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது eKYC பதிவை நிறைவு செய்யுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் கீழ் முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளில் இடம்பெற்றுள்ள பயனாளிகளின் ஆதார் விவரங்களை சரிபார்க்க eKYC நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் குடும்ப உறுப்பினர்களின் கைரேகை அடிப்படையிலான சரிபார்ப்பு பணிகள் கடந்த 2023 அக்டோபர் முதல் நடைபெற்று வருகின்றன.

இன்றைய சிறப்பு முகாமில் இதுவரை கைரேகை பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்கள், தங்களுக்கு அருகிலுள்ள நியாய விலைக் கடைக்குச் சென்று eKYC சரிபார்ப்பை மேற்கொள்ளலாம். பல மாவட்டங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள தகுதியான உறுப்பினர்களின் eKYC பதிவை முழுமையாக நிறைவு செய்வதே இந்த சிறப்பு முகாமின் முக்கிய நோக்கமாகும். குறிப்பாக, ஏற்கெனவே நடைபெற்ற முகாம்களில் கைரேகை பதிவு செய்யத் தவறியவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல், இடைத்தேர்தல் நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகள் இந்த மாநில அளவிலான சிறப்பு முகாமில் இருந்து விலக்கப்பட்டுள்ளதாக வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.