தமிழ்நாடு

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு தொடக்கம்!

top-news

சென்னை: மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களை ஒதுக்கீடு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. தேர்தல் பணிகளின் ஒரு பகுதியாக 2-ம் நிலை கணினி குலுக்கல் முறையில் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. 

தாராபுரம் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்வதற்கான குலுக்கல் செப்டம்பர் 24-ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் தேர்தல் சின்னங்களை பொருத்தும் பணிகள் செப்டம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. 

மதுராந்தகம் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்வதற்கான குலுக்கல் செப்டம்பர் 25-ம் தேதி நடைபெறுகிறது. அங்கு வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்களை இயந்திரங்களில் பொருத்தும் பணி செப்டம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் மேற்கொள்ளப்பட உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். 

மேலும், தாராபுரம் தொகுதியில் முதல்நிலை சரிபார்ப்பில் தேர்வு செய்யப்பட்ட கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களில் இருந்து 384 வாக்குப்பதிவு அலகுகள் முதல் கட்ட குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்களின் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் வழங்கப்பட்டுள்ளது. 

ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட உள்ளன. தேர்தல் நாளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச்சாவடிகளில் இந்த இயந்திரங்களே பயன்படுத்தப்படும் என்றும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்