தமிழ்நாடு

ஓட்டுநர் உரிமம், ஆர்சி டிஜிட்டல் மயம்: அரசாணைக்கு எதிரான வழக்கு... தமிழக அரசுக்கு 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு!

top-news

சென்னை: தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழை (RC) டிஜிட்டல் முறையில் பொதுமக்களே பதிவிறக்கம் செய்து கொள்ளும் நடைமுறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்களை டிஜிட்டல் வடிவில் பதிவிறக்கம் செய்யும் நடைமுறை செப்டம்பர் 12 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த மாற்றம் தொடர்பாக செப்டம்பர் 10-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

மனுவில், எதிர்காலத்தில் தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் கொண்டு வரப்படும் என அரசு தெரிவித்துள்ள நிலையில், அந்த எதிர்கால சட்டத் திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு டிஜிட்டல் சான்றிதழ் முறையை தற்போதே அமல்படுத்த முடியாது எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், பழைய முறையில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்களை வழங்கும் நடைமுறையை தொடர உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. 

டிஜிட்டல் முறைக்கு எதிரான மற்றொரு மனுவிலும், தற்போதுள்ள சான்றிதழ் வழங்கும் நடைமுறையை முழுமையாக நிறுத்துவதற்கு உரிய சட்ட அடிப்படை குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் ஆவணங்களை பதிவிறக்கம் செய்வதில் சில பயனர்களுக்கு ஏற்படக்கூடிய சிரமங்களும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. 

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு, தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய 2 வாரங்கள் அவகாசம் வழங்கி, விசாரணையை ஒத்திவைத்துள்ளது.