தமிழ்நாடு

60 ஆண்டுகளில் இல்லாத சாதனை? ஒரே நேரத்தில் 112 அரசு கல்லூரி முதல்வர்கள் நியமனம்!

top-news

சென்னை: தமிழகத்தில் ஒரே நேரத்தில் 112 இரண்டாம் நிலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இது தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிலான நியமனம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கடந்த 60 ஆண்டுகளில் ஒரே நேரத்தில் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான அரசு கல்லூரி முதல்வர்கள் நியமிக்கப்பட்டதில்லை என்று தெரிவித்தார். பொதுவாக 10 முதல் 25 கல்லூரிகளுக்கான முதல்வர் பணியிடங்களே ஒரே நேரத்தில் நிரப்பப்படும் என்றும் அவர் கூறினார். 

மேலும், 112 கல்லூரி முதல்வர்கள் நியமனம் தமிழக வரலாற்றில் முதல் முறையாக நடைபெறுவதாக அமைச்சர் தெரிவித்தார். இந்த நியமனங்கள் மூலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் நிர்வாகப் பணிகள் மேலும் சீராக நடைபெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அந்த விவகாரம் குறித்து தற்போது விரிவாக பேச முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார். 

துணைவேந்தர்கள் இல்லாத பல்கலைக்கழகங்களில் கன்வீனர் குழு மூலம் 11 பல்கலைக்கழகங்களில் பொறுப்பு துணைவேந்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் விஸ்வநாதன் கூறியுள்ளார். 

அரசு கல்லூரிகளில் நீண்டகாலமாக நிலவி வரும் முதல்வர் பணியிட காலியிடங்களை நிரப்புவது கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவர்களின் கல்விச் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் நிலையில், இந்த நியமனங்கள் தொடர்பான அடுத்தகட்ட நிர்வாக நடவடிக்கைகள் கவனம் பெற்றுள்ளன.