தமிழ்நாடு

வங்கி வேலைநிறுத்தம் எதிரொலி: தமிழக அரசு ஊழியர்களுக்கு செப்.25-ம் தேதியே ஊதியம்!

top-news

சென்னை: செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான செப்டம்பர் மாத ஊதியம் செப்டம்பர் 25-ம் தேதியே கணக்கில் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

வங்கி வேலைநிறுத்தம் தொடர்ச்சியாக 3 நாட்கள் நடைபெற உள்ளதுடன், மாத இறுதியும் நெருங்குவதால் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதில் ஏற்படக்கூடிய சிரமங்களைத் தவிர்க்கும் வகையில் இந்த முன்கூட்டிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான செப்டம்பர் மாத ஊதியத்துடன், சம்பந்தப்பட்ட படிகள் மற்றும் ஓய்வூதியத் தொகைகளும் செப்டம்பர் 25-ம் தேதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 28 முதல் 30 வரை நடைபெற உள்ள வங்கி வேலைநிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. இதையொட்டி, மத்திய அரசும் தனது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான செப்டம்பர் மாத ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை செப்டம்பர் 25-ம் தேதி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதனால் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் வழக்கமான தேதிக்கு முன்பாகவே செப்டம்பர் மாதத்திற்கான தொகையைப் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.