தமிழ்நாடு

“உயிர்களின் மறுவாழ்வுக்கு வழிகாட்டுபவர்கள்” : உடலுறுப்புக் கொடையாளர்களை நினைவுகூர்ந்த முதல்வர் விஜய்

top-news

சென்னை: செப்டம்பர் 23-ம் தேதி தமிழ்நாடு உடலுறுப்பு தான நாளாகக் கடைப்பிடிக்கப்படும் நிலையில், உடலுறுப்புக் கொடையாளர்களை பெருமையுடன் நினைவுகூர்வோம் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். உடலுறுப்பு தானத்தின் முக்கியத்துவம் குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், கொடையாளர்களின் மனிதநேயப் பங்களிப்பைச் சுட்டிக்காட்டியுள்ளார். 

தமிழ்நாட்டில் உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், சிறுவன் ஹிதேந்திரனின் உடலுறுப்பு தானத்தை நினைவுகூரும் வகையிலும் ஆண்டுதோறும் செப்டம்பர் 23-ம் தேதி உடலுறுப்பு தான நாளாக அனுசரிக்கப்படுவதாக முதல்வர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

உறுப்பு மாற்று சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்படும் உறுப்புகள் புதிய நம்பிக்கையையும் வாழ்வையும் அளிப்பதாக விஜய் தெரிவித்துள்ளார். ஒருவர் மறைந்த பின்னரும் அவரது உறுப்புகள் மூலம் மற்றவர்களுக்கு மறுவாழ்வு கிடைப்பது மிகுந்த மனிதநேயத்தைக் காட்டும் செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், உயிரிழந்த துயரத்திலும் தங்களது அன்புக்குரியவர்களின் உறுப்புகளை தானமாக வழங்கும் குடும்பங்களின் முடிவு பல உயிர்களுக்கு உதவுவதாகவும், இதுபோன்ற மனிதநேயச் செயல்களை சமூகத்தில் ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவரது பதிவு எடுத்துரைக்கிறது.

தமிழ்நாடு உடலுறுப்பு தான நாளில், உயிர்களின் மறுவாழ்வுக்கு வழிகாட்டும் அனைத்து உடலுறுப்புக் கொடையாளர்களையும் நினைவுகூர்வோம் என முதல்வர் விஜய் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.