சென்னை: தமிழகத்தில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களும் பயன்பெறும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் ச. ஜோசப் விஜய் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார். தொடக்க நிகழ்ச்சிக்குப் பிறகு பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை அருந்தினார்.
திருவான்மியூர் காந்திகிராமத்தில் உள்ள சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் மாணவர்களுக்கு உணவு பரிமாறினார். பின்னர் அவர்களுடன் அமர்ந்து உணவருந்தியதுடன், பள்ளி வகுப்பறைகள் மற்றும் வளாகத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த விரிவாக்கத்தின் மூலம் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான சுமார் 15.30 லட்சம் மாணவ, மாணவிகள் கூடுதலாக பயன்பெற உள்ளனர். இதற்காக நடப்பு நிதியாண்டில் கூடுதலாக ரூ.217.63 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக இத்திட்டத்துக்கு ரூ.724 கோடி நிதி ஒதுக்கப்படடுள்ளது.
சென்னை உள்ளிட்ட நகர்ப்புறங்களில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலமாகவும், ஊரகப் பகுதிகளில் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மூலமாகவும் மாணவர்களுக்கு காலை உணவு தயாரித்து வழங்கப்பட உள்ளது. திட்டத்தின் உணவு தரம், சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
முதல் நாளில் மாணவர்களுக்கு வெண் பொங்கல், சாம்பார் மற்றும் சர்க்கரைப் பொங்கல் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த திட்டம் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகள் இடம்பெறும் செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது



