மதுரை: தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலை விமர்சித்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, “தமிழகத்தில் இருக்கிற அரசியல் குப்பைகளை அள்ளிதான் ஆக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மதுரையில் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, தமிழக அரசியலில் அடிப்படை மாற்றம் ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அரசியலை வெறும் கட்சி சார்ந்த போட்டியாக பார்க்காமல், மக்கள் நலன் மற்றும் சமூக மாற்றத்தை மையமாகக் கொண்டதாக மாற்ற வேண்டும் என்பதே தனது கருத்து என அவர் கூறினார்.
தமிழகத்தில் ஏராளமான மக்கள் எந்த அரசியல் கட்சியிலும் அடிப்படை உறுப்பினர்களாக இல்லை என்றும், அவர்களை மாற்றத்துக்கான அரசியல் செயல்பாடுகளில் இணைக்க வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார். ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் சுற்றுச்சூழல் பணிகள் குறித்தும் அவர் பேசினார்.
மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர்நிலைகள் பராமரிப்பு, ஆறுகளை தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் பொதுமக்களின் பங்களிப்பு அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். இதன் ஒரு பகுதியாக பல்வேறு சுற்றுச்சூழல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் அரசியல் மாற்றம் குறித்த விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், அண்ணாமலையின் இந்தக் கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளன.



