தமிழ்நாடு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒருமுறை சிக்கன் பிரியாணி? அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய தகவல்

top-news

சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய சத்துணவில், வாரத்திற்கு ஒருமுறை சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்து பரிசீலனை நடைபெற்று வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்கும் வகையில் சத்துணவு மற்றும் காலை உணவுத் திட்டங்களில் மாற்றங்களை கொண்டு வருவது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அந்த வகையில், வாரம் ஒருமுறை சிக்கன் பிரியாணி வழங்கும் யோசனையும் முதல்வரிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இந்த திட்டம் பல்வேறு துறைகளுடன் தொடர்புடையது என்பதால், அதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் தேவையான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் ஊட்டச்சத்து தேவையை கருத்தில் கொண்டு உணவு வகைகளில் கூடுதல் மாற்றங்களை கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும், காலை உணவுத் திட்டத்தில் தற்போது வழங்கப்படும் சில உணவு வகைகளுக்கு மாற்றாக, மாணவர்களுக்கு அதிக ஊட்டச்சத்து மற்றும் சுவை கொண்ட உணவுகளை வழங்குவது குறித்தும் பரிசீலனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிக்கன் பிரியாணி திட்டம் குறித்து இறுதி முடிவு இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், முதல்வரின் பரிசீலனை மற்றும் பல்வேறு துறைகளின் ஆய்வுக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.