சென்னை: திமுக சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் முப்பெரும் விழா, வரும் செப்டம்பர் 19ஆம் தேதி மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் என்று கட்சித் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. விழாவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார்.
முன்னதாக, இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழா செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. தற்போது புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தொடங்கப்பட்ட நாள், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் மற்றும் தந்தை பெரியாரின் பிறந்தநாள் ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளை இணைத்து ஆண்டுதோறும் முப்பெரும் விழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விழாவில் திமுக சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது மற்றும் மு.க.ஸ்டாலின் விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.
செப்டம்பர் 19ஆம் தேதி மாலை 5 மணியளவில் நடைபெற உள்ள விழாவுக்கான ஏற்பாடுகளை திமுக நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர்.



