சென்னை: தமிழக சட்டப்பேரவையில் காவல் துறை, தீயணைப்புத் துறை மற்றும் மீட்புப் பணிகள் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்த முதல்வர் விஜய், திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கடுமையாக விமர்சித்தார். “மக்களை ஏமாற்றிய திமுகவின் போலி பிம்பம், பிராண்ட் உடைக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.
பேரவையில் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த விஜய், தனிப்பட்ட குற்றச் சம்பவங்களை மட்டும் வைத்து ஒட்டுமொத்த மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக கூற முடியாது என தெரிவித்தார். பொதுமக்கள் பாதுகாப்பும், நம்பிக்கையும் ஆட்சியின் முக்கிய அடையாளங்களாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து, திமுக ஆட்சிக்கால ஊழல் தொடர்பான பழைய விவகாரங்களை குறிப்பிட்ட விஜய், சர்க்காரியா கமிஷன் அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை சுட்டிக்காட்டி திமுக மீது விமர்சனம் முன்வைத்தார். மேலும், அமலாக்கத்துறை அறிக்கையில் கூறப்பட்டதாக சில குற்றச்சாட்டுகளையும் பேரவையில் அவர் குறிப்பிட்டார். இவை தொடர்பான விவகாரங்கள் குறித்து திமுக தரப்பில் மறுப்பு மற்றும் பதிலடி கருத்துகள் வெளியாகியுள்ளன.
“மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசாவும் தொட மாட்டோம்; தொட்டவர்களையும் விடமாட்டோம்” என்ற நிலைப்பாட்டையும் முதல்வர் விஜய் மீண்டும் வலியுறுத்தினார். ஆட்சியின் அடையாளம் தனிப்பட்ட அரசியல் தலைவரை சார்ந்ததாக இல்லாமல், தமிழ், தமிழர், தமிழ்நாடு மற்றும் மக்கள் நலனை மையமாகக் கொண்டதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, முதல்வர் பதிலுரைக்குப் பிறகு எதிர்க்கட்சியினருக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதாகக் கூறி திமுக உறுப்பினர்கள் பேரவையில் அமளியில் ஈடுபட்டு பின்னர் வெளிநடப்பு செய்தனர். முதல்வரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க தங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தரப்பு விமர்சித்துள்ளது.



