தமிழ்நாடு

காவல் துறை மானியக் கோரிக்கை விவாதம்: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

top-news

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் காவல் துறை, உள்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதல்வர் விஜய் இன்று பதிலுரை வழங்க உள்ளார்.

கடந்த செப்டம்பர் 3-ம் தேதி நடைபெற்ற காவல் துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தனர். குறிப்பாக சட்டம்-ஒழுங்கு, குற்றச்சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தன.

இந்த விவாதங்களுக்கு திங்கட்கிழமை பதிலளிப்பதாக முதல்வர் விஜய் ஏற்கெனவே சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார். பதிலுரை வழங்கும் நேரத்தில் உறுப்பினர்கள் அனைவரும் அவையில் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இதனால், இன்று முதல்வர் விஜய் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு என்ன பதில் அளிக்க உள்ளார் என்பதும், காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறை தொடர்பாக புதிய அறிவிப்புகள் ஏதேனும் வெளியாகுமா என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், காவல்துறை பணியாளர்களின் நீண்டகால கோரிக்கைகள், ஊதிய முரண்பாடுகள் மற்றும் பதவி உயர்வு தொடர்பான விவகாரங்களிலும் அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.