தமிழ்நாடு

கே.என்.நேருவிடம் விரைவில் விசாரணை: ஆவணங்களை தீவிரமாக ஆய்வு செய்யும் லஞ்ச ஒழிப்புத்துறை!

top-news

சென்னை: முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையைத் தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அவரிடம் விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ரூ.1,020 கோடி மதிப்பிலான டெண்டர்களில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனையில் 241 ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்களை அதிகாரிகள் தற்போது ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த ஆய்வின் அடிப்படையில் கே.என்.நேரு, அவரது சகோதரர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், தன் மீதான குற்றச்சாட்டுகளை கே.என்.நேரு திட்டவட்டமாக மறுத்துள்ளார். சோதனைக்கு முழுமையாக ஒத்துழைத்ததாகவும், தாம் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையின் அடுத்தகட்ட விசாரணை நடவடிக்கைகள் மற்றும் கே.என்.நேருவிடம் கேட்கப்பட உள்ள கேள்விகள் குறித்து அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விசாரணையின் முடிவில் வெளியாகும் தகவல்களைப் பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும் என தெரிகிறது