சென்னை: கோயில்களுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காகவே செல்போன் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலைத் தமிழ்நாடு அரசின் 'தகவல் நம்பகத்தன்மை பிரிவு' (TN Fact Check) மறுத்துள்ளது.
பரவும் தவறான செய்தி: "கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையைக் குறைக்க மட்டுமே செல்போன் தடை விதிக்கப்பட்டுள்ளது" என்று திரைப்பட இயக்குநர் மோகன் ஜி கூறியதாகச் செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வந்தது.
உண்மை நிலவரம் என்ன?: இது குறித்துத் தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில்:
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை 2022-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பின்படியே கோயில்களில் செல்போன் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோயில்களின் புனிதத்தன்மையையும் கண்ணியத்தையும் பேணிப் பாதுகாக்கவும், செல்போன்களைப் பாதுகாப்பாக வைக்க 'வைப்பக மையங்களை' (Safety Deposit Counters) அமைக்கவும் இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
உயர்நீதிமன்ற உத்தரவின்படி, முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் உள்ள 52 முதுநிலைத் திருக்கோயில்களில் மட்டுமே செல்போன் எடுத்துச் செல்வதற்கான தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, பக்தர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவே தடை விதிக்கப்பட்டதாகப் பரப்பப்படும் செய்தி முற்றிலும் தவறானது என்றும், உண்மைக்குப்புறம்பான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



