சென்னை: விவசாய நிலங்களை விவசாயம் அல்லாத பிற பயன்பாடுகளுக்கு எளிதாக மாற்றம் செய்ய வழிவகுக்கும் சட்டத்திருத்த முடிவைக் கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
விவசாய நிலங்கள் சுருங்கும் அபாயம்: இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வணிகம் மற்றும் தொழில் துறை வளர்ச்சி என்ற பெயரில், விவசாய நிலங்களை உடனடியாக வகைமாற்றம் செய்யும் வகையில் சட்ட விதிகளில் திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன. இத்தகைய மாற்றங்கள் வேளாண் நிலங்களைச் சுருக்கி, உணவுப் பாதுகாப்பிற்குப் பெருத்த அச்சுறுத்தலை ஏற்படுத்தும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
வேளாண் துறையின் கருத்து பெறப்பட வேண்டும்: நில வகைமாற்றம் தொடர்பாக வேளாண்மைத் துறையின் முன்அனுமதி (NOC) மற்றும் ஆய்வு நடைமுறைகளைத் தளர்த்துவது அல்லது நீக்குவது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ரியல் எஸ்டேட் வணிகர்களுக்கும் மட்டுமே சாதகமாக அமையும். இதன் மூலம் விளைநிலங்கள் தங்கு தடையின்றி கைமாறும் சூழல் உருவாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழக அரசுக்குக் கோரிக்கை: விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் வகையில், விவசாய நில வகைமாற்றம் தொடர்பான சட்டத்திருத்த நடவடிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். மேலும், விளைநிலங்கள் எக்காரணம் கொண்டும் பிற தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க கடுமையான விதிக நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் மு.வீரபாண்டியன் கேட்டுக்கொண்டுள்ளார்.



