சென்னை: அதிமுகவில் இருந்து விலகி சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) பதவியை ராஜினாமா செய்த இசக்கி சுப்பையா, தனது ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெறுவதாகச் சட்டப்பேரவைச் தலைவரிடம் கடிதம் கொடுத்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் சட்டசபை செயலகம் அடுத்து என்ன பதில் அளிக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் இசக்கி சுப்பையா. உட்கட்சிப் பூசல் மற்றும் அரசியல் மாற்றங்கள் காரணமாகத் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தார். இதனிடையே, எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா மற்றும் தகுதிநீக்கம் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வரும் சூழலில், சபாநாயகருக்கு இசக்கி சுப்பையா திடீரென ஒரு மனுவை அனுப்பி இருந்தார். அதில், "தொகுதி மக்கள் பிரதிநிதி இல்லாமல் பாதிக்கப்படுவதால், வழக்கு முடிவடையும் வரையிலாவது தனது ராஜினாமாவை நிறுத்திவைத்து, மீண்டும் எம்.எல்.ஏ-வாகப் பணியாற்ற அனுமதிக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.
சட்டமன்ற செயலகத்தின் நிலைப்பாடு:அரசியலமைப்புச் சட்ட விதிகளின்படி, ஒரு சட்டமன்ற உறுப்பினர் அளித்த ராஜினாமா கடிதம் சபாநாயகரால் முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, அதை மீண்டும் திரும்பப் பெறுவதற்கான (Withdrawal) சட்டங்கள் அல்லது நடைமுறை விதிகள் எதுவும் இல்லை எனச் சட்டப்பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இசக்கி சுப்பையாவின் கடிதத்திற்குச் சட்டசபை செயலகம் தரப்பில் இன்று அதிகாரப்பூர்வமாகப் பதில் அனுப்பப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு:இசக்கி சுப்பையாவின் இந்த நடவடிக்கை அரசியல் களத்தில் பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது. சபாநாயகர் எடுக்கும் முடிவும், சட்டசபை செயலகம் அளிக்கவுள்ள எழுத்துப்பூர்வ பதிலும் இந்த விவகாரத்தின் அடுத்தகட்ட நகர்வைத் தீர்மானிக்கும் என்பதால், இன்று வெளியாகும் பதில் மீது அனைத்து தரப்பினரின் கவனமும் திரும்பியுள்ளது.



