தமிழ்நாடு

கோவை மாணவர் அமுதன் கொலை: “முன்விரோதமே காரணம்; போதைப்பொருள் விவகாரம் அல்ல” - அமைச்சர் நிர்மல் குமார்

top-news

கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலைக்கு முன்விரோதம் காரணமாக இருந்ததாகவும், இந்த சம்பவத்தை போதைப்பொருள் விவகாரத்துடன் தொடர்புபடுத்த வேண்டாம் என்றும் சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.

கோவை மாணவர் அமுதன் கொலை தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர், மாணவர் கொலை சம்பவம் மற்றும் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், அமுதன் கொலை சம்பவம் உண்மை நிலவரத்துக்கு மாறாக சித்தரிக்கப்படுவதாகக் கூறினார். மாணவர்களிடையே ஏற்பட்ட முன்விரோதம் மற்றும் பழிவாங்கும் நோக்கிலான தாக்குதலே கொலைக்கு காரணமாக அமைந்ததாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த வழக்கில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அமுதன் உள்ளிட்டோர் சக மாணவர்களைத் தாக்கியதாகப் பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அமுதன் கொலை வழக்கில் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவோ அல்லது போதைப்பொருள் தொடர்பான புகார் காரணமாகவோ விசாரணையில் இதுவரை தெரியவில்லை என்றும் நிர்மல் குமார் தெரிவித்தார். எனவே, சம்பவத்தை போதைப்பொருள் விவகாரமாக திசைதிருப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த வழக்கில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 3 மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் பேரவையில் தெரிவித்தார்.

அமுதன் கொலை தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கும், அரசு தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கங்களுக்கும் இடையே பேரவையில் கடும் விவாதம் நடைபெற்ற நிலையில், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மீது கவனம் திரும்பியுள்ளது.