தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி பயணம்

top-news

சென்னை: தமிழ்நாட்டுக்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு விமானத்தில் ஜெர்மனிக்குப் புறப்பட்டார். அவருடன் துர்கா ஸ்டாலின், முதல்வரின் செயலர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் இணைந்துள்ளனர். இன்று இரவு 9 மணிக்கு ஜெர்மனி சென்றடையும் அவருக்கு அங்குள்ள அயலக தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.

ஜெர்மனியில் முதலீட்டாளர்களை சந்தித்த பிறகு, முதல்வர் செப்டம்பர் 1-ம் தேதி இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்குப் பயணம் தொடர உள்ளார்.

விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:
“ஒருவார கால வெளிநாட்டு பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து செல்கிறேன். இந்த பயணத்தில் தமிழ்நாட்டுக்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதோடு, புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

2021-ல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை ரூ.10.62 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்து, 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது. பல நிறுவனங்கள் ஏற்கனவே உற்பத்தியைத் தொடங்கியுள்ளன. இதனால் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதா என்பதை ஒன்றிய அரசு வெளியிடும் புள்ளிவிவரங்களே உறுதிப்படுத்துகின்றன.

ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, ஸ்பெயின், ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களின் மூலம் மட்டும் ரூ.18,498 கோடி முதலீடுகள் தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ளன. நாட்டிலேயே அதிவேகமாக வளர்ச்சி கண்டுவரும் தமிழ்நாட்டை நோக்கி மேலும் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் ஜெர்மனி, இங்கிலாந்துக்கு பயணம் செய்கிறேன். அதற்கான உங்கள் வாழ்த்துகள் எனக்கு தேவை. தமிழ்நாட்டு மக்களின் அன்புடன் புறப்படுகிறேன்” என்றார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருப்பது அவருடைய பார்வை. ஆனால் நான் கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் நடைமுறைக்கு வந்துள்ளன.

திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் சேர்ந்தாலோ இல்லையோ, புதிய வாக்காளர்கள் தொடர்ந்து எங்களுடன் இணைந்து கொண்டிருக்கின்றனர். அதுவே உண்மை. பிஹாரில் நடந்ததைப் போல, தமிழ்நாட்டில் எப்படிப்பட்ட சதி நடந்தாலும் அதை முறியடிக்கும் வல்லமை தமிழ்நாட்டுக்கு உண்டு” எனத் தெரிவித்துள்ளார்.