விளையாட்டு

ஆசிய கோப்பை.. மௌனம் கலைத்த நக்வி.. பிசிசிஐக்கு விதித்த நிபந்தனை என்ன?

top-news

ஆசியக் கோப்பையை ஐக்கிய அரபு அமீரகத்திடம் (UAE) தான் ஒப்படைத்துவிட்டதாக வெளியான தகவலை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) தலைவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய (PCB) தலைவருமான மொஹ்சின் நக்வி திட்டவட்டமாக மறுத்துள்ளார். வெற்றியாளர் கோப்பையை இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) பெற்றுக்கொள்ள விரும்பினால், தனது அலுவலகத்திற்கு வந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்ச்சை என்ன?

அண்மையில் நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. எனினும், அரசியல் பதற்றங்கள் காரணமாக, இந்திய வீரர்கள் நக்வியிடம் இருந்து கோப்பையை ஏற்க மறுத்தனர். இதனையடுத்து, பரிசளிப்பு விழாவில் இருந்து கோப்பை அகற்றப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், ஏ.சி.சி தலைவர் என்ற முறையில் தான் கோப்பையை வழங்கத் தயாராக இருப்பதாகவும், பிசிசிஐ அலுவலகத்தில் தான் யாரிடமும் மன்னிப்பு கேட்கவில்லை என்றும் நக்வி தனது 'எக்ஸ்' (X) சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


நக்வி மறுப்பு:

"கோப்பையை ஐக்கிய அரபு அமீரகத்திடம் வழங்கிவிட்டதாக வரும் தகவல்கள் அப்பட்டமான பொய்கள்" என நக்வி மறுத்துள்ளார். மேலும், "நான் ஏ.சி.சி தலைவராக இருக்கிறேன். கோப்பையை வழங்க அன்றைய தினமே நான் தயாராக இருந்தேன். இப்போதும் தயாராகவே இருக்கிறேன். உண்மையில் கோப்பை அவர்களுக்குத் தேவை என்றால், அவர்கள் ஏ.சி.சி அலுவலகத்திற்கு வந்து என்னிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்" என்று அவர் சவால் விடுத்துள்ளார்.

இந்த விவகாரத்தில் பிசிசிஐ சார்பில் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்ட போதும், நக்வி தனது முடிவில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. இந்த விவகாரம் அடுத்தகட்டமாக ஐசிசி கூட்டத்தில் எழுப்பப்படும் என பிசிசிஐ தரப்பு தெரிவித்துள்ளது.