மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு தீபாவளிப் பரிசாக, அகவிலைப்படியை (Dearness Allowance - DA) 3 சதவீதம் உயர்த்தி வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது 55%ஆக உள்ள அகவிலைப்படி, இந்த உயர்வு காரணமாக 58% ஆக அதிகரித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அவர் தெரிவித்ததாவது:
மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக 3% அகவிலைப்படி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த உயர்வு, 2025 ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.
தற்போதுள்ள அடிப்படைச் சம்பளம்/ஓய்வூதியத்தில் 55% ஆக இருக்கும் அகவிலைப்படி, இந்த 3% உயர்வு மூலம் 58% ஆக உயரும்.
7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது.
இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் சுமார் 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 64.89 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவார்கள்.
இந்த உயர்வைச் செயல்படுத்துவதால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ₹9,448 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.
விலைவாசி உயர்வை ஈடுகட்டும் விதமாக ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது. பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பது, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


