நடிகர் விஜயின் 'தமிழக வெற்றிக் கழகம்' (தவெக) சார்பில் கரூரில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி இன்று (செப்டம்பர் 28, 2025) நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் படுகாயமடைந்தவர்களையும் அவர் சந்தித்து, உடல்நலம் குறித்து விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, இந்தக் கோர விபத்துக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததே காரணம் என்று குற்றம் சாட்டினார்.
இதையும் படிக்க: கரூர் கூட்ட நெரிசல்: 39 பேர் உயிரிழப்பு.. விஜய் கருத்து தெரிவிக்காமல் புறப்பட்ட தவெக தலைவர் விஜய்..!
மின்சாரம் துண்டிப்பே காரணம்: "கரூர் கூட்டத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மின்விளக்குகள் அணைக்கப்பட்டன. இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, கூட்ட நெரிசலில் சிக்கிப் பலர் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால்தான் இந்த துயரச் சம்பவம் நடந்திருக்கிறது."
தவெக மீது குற்றச்சாட்டு: "தவெக இதற்கு முன்பு நான்கு மாவட்டங்களில் கூட்டத்தை கூட்டியிருக்கிறார்கள். அப்போதே உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். ஆனால், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. போலீஸ் பாதுகாப்பு இல்லாததே இந்தப் பலிக்குக் காரணம்."
ஆளும் கட்சி பாரபட்சம்: "தங்கள் கூட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான காவல்துறையினரை பாதுகாப்புக்கு நியமிக்கும் தி.மு.க. அரசு, எதிர்க்கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறது. போலீஸ் பாகுபாடு இல்லாமல் பாதுகாப்பு வழங்க வேண்டும்."
இந்தச் சம்பவத்தில் 39 பேர் உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவரின் இந்த நேரடி சந்திப்பும், மின்சாரம் துண்டிப்பு குறித்த குற்றச்சாட்டுகளும் தமிழக அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


