அரசியல்

கரூர் கூட்ட நெரிசல்: 39 பேர் உயிரிழப்பு.. விஜய் கருத்து தெரிவிக்காமல் புறப்பட்ட தவெக தலைவர் விஜய்..!

top-news

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் கலந்துகொண்ட தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கோரமான கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 8 குழந்தைகள் மற்றும் 17 பெண்களும் அடங்குவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து கரூர் மற்றும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரூரில் சனிக்கிழமை (செப்டம்பர் 27, 2025) மாலை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அனுமதிக்கப்பட்ட அளவை விடப் பன்மடங்கு அதிகமானோர் குவிந்ததால், கட்டுக்கடங்காத கூட்டம் நெரிசலுக்கு வழிவகுத்தது. ஒரு கட்டத்தில் கூட்டம் நெரிசலாகி, மக்கள் மூச்சுத்திணறியும், நெரிசலில் சிக்கியும் உயிரிழந்தனர்.

அரசின் நடவடிக்கைகள் மற்றும் விஜயின் மௌனம்

இந்தத் துயரச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அதிர்ச்சியும் கவலையும் தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்குச் சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார். மேலும், சம்பவத்தின் காரணங்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்தும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வரின் உத்தரவின் பேரில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் கரூர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று சிகிச்சை மற்றும் மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.


இச்சம்பவம் நடந்த பின்னர், பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தவெக தலைவர் விஜய், அங்கிருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையம் வந்தபோது, செய்தியாளர்கள் அவரிடம் கருத்து கேட்க முயன்றனர். ஆனால், அவர் சம்பவம் குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் மௌனமாகச் சென்றுள்ளார். அவரது இந்த மௌனம் அரசியல் வட்டாரங்களில் கேள்விகளை எழுப்பியுள்ளது. இருப்பினும், இந்தச் சம்பவம் தொடர்பாக தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்த விஜய், "என் இதயம் நொறுங்கிப் போனது; தாங்க முடியாத, சொல்ல முடியாத துயரத்திலும், வேதனையிலும் துடிக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து தவெக-வின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி. மதியழகன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கூட்டத்தை ஒழுங்கமைப்பதில் ஏற்பட்ட குளறுபடிகள், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாதது ஆகியவையே இந்தத் துயரத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.2