தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கோரமான கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த நிலையில், இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படுவாரா? என்ற கேள்விக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
உயிரிழப்புச் சம்பவம் நடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 27, 2025) நள்ளிரவே கரூர் சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 51 பேரைச் சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
"விவரிக்க முடியாத கொடூரமான துயரம்" - முதலமைச்சர் வேதனை
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "மிகுந்த துயரத்துடனும், மிகவும் கனத்த இதயத்துடனும் நான் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன். கரூரில் நடந்திருக்கக்கூடிய இந்தக் கொடூரமான துயரத்தைப் பற்றி விவரிக்கக்கூடிய மனசு எனக்கு இடம் கொடுக்கவில்லை. அந்த அளவுக்கு நானும் வேதனையில் இருக்கிறேன்," என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.
மேலும் அவர் கூறுகையில், "இந்தச் சம்பவத்தில் மொத்தம் 39 உயிர்களை இதுவரை இழந்திருக்கிறோம். இதில் 13 ஆண்கள், 17 பெண்கள், 4 ஆண் குழந்தைகள், 5 பெண் குழந்தைகள் உயிரிழந்திருக்கிறார்கள். ஒரு அரசியல் கட்சி நடத்திய கூட்டத்தில் இத்தனை பேரை இழந்த துயரமான சம்பவம் என்பது தமிழக வரலாற்றில் இதுவரை நடக்காதது. இனிமேல் நடக்கக் கூடாது." என்று வேதனை தெரிவித்தார்.
விஜயின் கைது குறித்த கேள்விக்கு பதில்
சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படுவாரா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், "நான் அரசியல் நோக்கத்தோடு எதையும் சொல்ல விரும்பவில்லை. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த விசாரணை ஆணையத்தின் அறிக்கை வந்த பிறகு, உரிய நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும்" என்று திட்டவட்டமாகக் கூறினார்.
இதையும் படிக்க: கரூர் கூட்ட நெரிசல்: 39 பேர் உயிரிழப்பு.. விஜய் கருத்து தெரிவிக்காமல் புறப்பட்ட தவெக தலைவர் விஜய்..!
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்குச் சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் முதல்வர் மீண்டும் உறுதிப்படுத்தினார். மேலும், 51 பேர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாக தவெக-வின் கரூர் மாவட்டச் செயலாளர் மீது காவல்துறை ஏற்கனவே வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


